மதுரை:இந்திய ரயில்வே துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் எம்பி ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் சந்தித்தனர். இது குறித்து சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்திய ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புப் பிரச்னைகளையும், தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்களின் போராட்டத்தையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
இந்திய ரயில்வேயில் மோதல்கள் உட்பட சமீபத்திய விபத்துகளுக்கு பிற காரணங்களுடன் மனிதத் தவறுகளும் காரணமாக சுட்டிக் காட்டப்படும் வேளையில், லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளை சரிசெய்ய வேண்டிய அவசரத் தேவை எற்பட்டுள்ளது. பெரும்பாலும் சரக்கு ரயில் லோகோ பைலட்டுகள் ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
3 அல்லது 4 நாட்கள் கழித்து வீடு திரும்புகிறார்கள், தொடர்ந்து 4 இரவுகளுக்கு மேல் வேலை செய்கிறார்கள், அதன் பிறகும் வாராந்திர ஓய்வு சரியாக வழங்கப்படுவதில்லை. தலைமையகத்தில் ஓய்வு இல்லாததால், சிவப்பு சிக்னலை கடக்கும் (சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர், SPAD) நிகழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது மோதல்களுக்கு இரண்டாம் காரணம். சிக்னல் செயலிழக்கும்போது செயல்பட வேண்டிய குழப்பமான உத்தரவுகளும் முதன்மைக் காரணம். இந்திய ரயில்வேயில் 2022 -23ல் மட்டும் 51 ஆயிரத்து 888 சிக்னல்கள் செயலிழந்து உள்ளன.
வேலை நேரம்:ஒரு நாளைக்கு 8 மணி நேரப் பணி என்பதை உறுதிப்படுத்தும் ஐஎல்ஓ மாநாடு முடிந்து 105 ஆண்டுகளுக்குப் பிறகும் லோகோ பைலட்டுகளுக்கு 8 மணி நேரப் பணியும், வாராந்திர ஓய்வும் கானல் நீராக உள்ளது. ரயில்வே வாரியத்தின் 1968ஆம் ஆண்டு உத்தரவில், ரன்னிங் ஊழியர்களின் வேலை நேரம் 14 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இன்னமும் அது எட்டாக்கனியாகவே உள்ளது.
விசாகப்பட்டினம் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது அறிக்கையில் “ஊழியர்கள் நான்கு இரவுகள் தொடர்ந்து பணியாற்றுவது பாதுகாப்பற்றது” என்று கூறியுள்ளார். தொடர்ச்சியான இரவுகள் இரண்டாக மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். லோகோ பைலட்டுகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே லோகோ பைலட்டுகள் தொடர் இரவுப்பணியை இரண்டாகக் குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.