திருநெல்வேலி: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று (ஏப்.4) இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 28 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். முருகன் வீட்டில் இன்று (ஏப்.5) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பாளையங்கோட்டையில் உள்ள ஆர்.எஸ். முருகனின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.எஸ். முருகன் அதிமுகவின் முக்கிய பிரமுகராக உள்ள இவர், 450 கோடி ரூபாய் மதிப்புள்ள திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச் சாலை உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களை ஒப்பந்தம் எடுத்துள்ளார். திமுக மற்றும் அதிமுக என இரு கட்சி நிர்வாகிகளிடம் மிகுந்த நெருக்கம் கொண்டவராக இருப்பவர்.
தமிழகத்தில் திமுக - அதிமுக மாறி மாறி ஆட்சியைப் பிடித்தாலும் இரண்டு கட்சி ஆட்சியின் போதும் ஆர்.எஸ். முருகன் முக்கிய அரசுத் திட்டங்களை ஒப்பந்தம் எடுக்கும் அளவுக்குச் செல்வாக்கு மிக்கவர். தற்போது கூட பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, ஆர்.எஸ். முருகன் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகளுக்குப் பண உதவி எதுவும் செய்துள்ளாரா என்பது குறித்து வருமான வரித்தனர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், வேட்பாளர்களுக்கு இவர் பண உதவி செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நேற்று திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து இன்று அரசு ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல: முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்! - Lok Sabha Elections 2024