தேனி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிருகிறார். இதனால், அப்பகுதிகளில் அமமுக கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 15 க்கும் மேற்பட்டோர் தங்கி, தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் உள்ள பெரியகுளம் சட்டமன்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த அமமுக நிர்வாகிகளிடம் பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நான்கு நபர்கள் கொண்ட வருமான வரித்துறையினர், பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் மற்றும் தேர்தல் பறக்கும் படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள், நேற்று இரவு 10 மணி முதல், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.