தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்; ராஜபாளையம் கண்மாயில் விஷம் கலப்பா? நடந்தது என்ன? - Rajapalayam Kanmai Fish dead issue - RAJAPALAYAM KANMAI FISH DEAD ISSUE

Rajapalayam Kanmai issue: முன் விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர் யாரோ, கண்மாயில் விஷம் கலந்ததால், ராஜபாளையம் கண்மாயில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாகக் கண்மாயை ஏலத்திற்கு எடுத்த பொன் இருளப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்
கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:32 PM IST

கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரத்தை சேர்ந்தவர் பொன் இருளப்பன். இவர் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தில் அமைந்துள்ள கொசவன் குளம் கண்மாயை 5 ஆண்டுகளுக்கு மீன் பாசி ஏலம் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு 1.25 லட்சம் ரூபாய் கட்டி மீன்களை வளர்த்து விற்பனை செய்துள்ளார். இந்த ஆண்டு அரசுக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டி, கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிசி மற்றும் மண்டை கட்லா மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாய்க்குள் விட்டுள்ளார்.

ஒரு கிலோ வரை வளர்ச்சி காணும் இந்த வகை மீன்கள் தற்போது சுமார் 400 கிராம் வரை வளர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை கண்மாய்க்கு சென்று பார்த்த பொன் இருளப்பன், மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், மீன்களுக்கு உணவாகும் சிறிய கூனி வகை இறால் குஞ்சுகளும் கரையோரம் செத்து மிதப்பதால், கண்மாயில் விஷம் கலந்திருக்கக் கூடும் என சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கண்மாயில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் தற்போது அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில், இரண்டு கிடங்குகள் உள்ள நிலையில், ஒரு கிடங்கில் உள்ள மீன்கள் மட்டும் செத்து மிதக்கிறது. அருகே உள்ள கிடங்கில் உள்ள மீன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் முன் விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர் யாரோ, கண்மாயில் விஷம் கலந்துள்ளதாகத் தனது புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து பொன் இருளப்பன் கூறியதாவது, “இரண்டு கிடங்குகள் உள்ள நிலையில், ஒரு கிடங்கில் உள்ள மீன்கள் மட்டும் செத்து மிதக்கின்றன. அதனால் கடுமையான வெயிலால் மீன்கள் செத்திருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சிறிய சிறிய இறால் மீன்களும் செத்து மிதக்கின்றன. எனவே கண்மாயில் கண்டிப்பாக யாரோ விஷம் கலந்துள்ளனர். மீன்கள் அனைத்தும் செத்து விட்டதால் 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கண்மாயில் விஷம் கலந்த குற்றவாளியைக் கைது செய்வதுடன், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டியில் குடிநீர் கிணற்றில் மலம்? ஆய்வில் கிடைத்த அந்தப் பொருள் என்ன? கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு..! - Human Feces In Well In Vikravandi

ABOUT THE AUTHOR

...view details