தென்காசி: தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 72.09 சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது. அந்த வகையில் இன்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் பகுதியில் உள்ள மக்கள் தேர்தலைப் புறக்கணித்து உள்ளனர். இருமன்குளம் பகுதியில் சுமார் 1231 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் இன்று வெறும் 60 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு காரணமாக, அந்த பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக் கோரியும், இது குறித்து பல முறை போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டிக்கவில்லை எனவும், உடனடியாகக் கல்குவாரியை மூட கோரியும் பொதுமக்கள் வாக்களிக்காமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அதேபோல், கல்குவாரிக்கு அருகே உள்ள ப்ளூ மெட்டல் கிரேசரையும் மாவட்ட நிர்வாகம் செயல்பட அனுமதித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதையும் நிரந்தரமாக மூடக்கோரி வாக்களிக்காமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 1231 வாக்காளர்கள் உள்ள நிலையில், வெறும் 60 பேர் மட்டுமே வாக்களித்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்பட்டது.