தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு; பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை!

Neomax Case: நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி செய்த விவகாரத்தில், நிறுவன இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

neomax-financial-fraud-case-madurai-high-court-imposed-interim-stay-on-order-of-economic-offenses-court
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு; பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது மதுரை உயர் நீதிமன்றம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 5:59 PM IST

மதுரை:மதுரையை தலைமையாகக் கொண்டு 'நியோமேக்ஸ்' பிராப்பர்ட்டீஸ் பிரைவட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குனர்களாக வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் உள்பட பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி, தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன.

தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி பலர் பல ஆயிரம் கோடிக்கு முதலீடுகளைச் செய்துள்ளனர். ஆனால், கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் பலர் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் பலர் பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் இயக்குநர் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி விருதுநகரைச் சேர்ந்த ரவிசங்கர் மற்றும் ராஜ்குமார் என்பவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்மண்டல பொருளாதாரக் குற்றவியல் கண்காணிப்பாளர் பாகெர்லா கல்யாண் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன் ஆஜராகி, “நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை அசையா சொத்துக்கள் 9,428 சொத்து பத்திரங்கள், 99 பத்திரப் பதிவு அலுவலகங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை வழக்கில் அட்டாச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி நிறுவனத்தின் 752 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதிலுள்ள பணம் ரூபாய் 15 கோடி முடக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி தண்டபாணி, “நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் விசாரணை நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்தது எவ்வாறு? விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த அதிகாரம் இருக்கிறதா” என கேள்வி எழுப்பிய நீதிபதி, பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தார்.

மேலும், “நிதி நிறுவன மோசடி வழக்கில், நிறுவன சொத்துக்களை அரசுடைமையாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்” என எச்சரித்து, வழக்கு விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:கல்பாக்கத்தில் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? அரசியலா?

ABOUT THE AUTHOR

...view details