திருநெல்வேலி: தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தொடங்கி கொடைக்கானல், நீலகிரி, ஆனைமலை, சிறுவாணி அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் வசிக்கின்றன. இந்த நிலையில், வரையாடுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இதற்கான சிறப்பு நிதியாக ரூ.25 கோடி கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது போல், வரையாடுகள் கணக்கெடுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் வசிக்கும் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணி நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது. நேற்று தொடங்கி நாளை (மே 1) வரை, அதாவது 3 நாட்கள் இந்த கணக்கெடுப்பை வனத்துறையினர் நடத்துகின்றனர்.