சென்னை:சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும்படி, அம்பத்தூர் வட்டாட்சியருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள்
வேண்டுமென்ற அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து, இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:பொம்மைகள், பள்ளி புத்தகப்பையோடு அடக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் உடல்.. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க ஊர்வலம்!