அரியலூர்: அரியலூர் சிறப்பு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள், காவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர், அரியலூர் முட்டுவாஞ்சேரி சாலையில், அம்பலவார் கட்டளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அரியலூர் வட்டம், கீழைசனை கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 600 ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரபல பைனான்ஸ் நிறுவனத்திற்காக வசூல் செய்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பதால், பறக்கும் படை அலுவலர் கோவிந்தராஜ், 1 லட்சத்து 56 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்து, அரியலூர் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தார். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, இப்பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.