சென்னை:வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் மற்றும் அதன் விளைவாக பெய்த கனமழையால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புயல், மழை பலத்த சேதங்களை விளைவித்துள்ளது. இம்மாவட்டங்கள் நிவாரண மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
'தெற்கு மத்திய வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி வரும். இது 7 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து மற்றொரு தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் புயல் உருவாகுவதற்கான வாய்ப்புகள் இல்லை' என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.