விமானம் மூலம் சென்னை வந்த பாடகி பவதாரணியின் உடல் சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி(47) உடல்நலக் குறைவால் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும் சினிமா பின்னணி பாடகியுமான பவதாரிணி நேற்று (ஜன.25) மாலை இலங்கையில் உயிரிழந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.25) மாலை திடீர் மரணம் அடைந்தார்.
பல்வேறு படங்களில் முன்னணி பாடகியாக வலம்வந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பவதாரிணியின் மறைவு செய்தி திரைத்துறை மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவரது உடலைச் சென்னை கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அவரின் உடலை இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் அவரது உடலைப் பெற்றுக் கொள்வதற்கு அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு விமான நிலையம் சென்றனர். பின்னர் விமான நிலையத்தில் அவரது ஆவணங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைக் குடியுரிமை அதிகாரிகளின் பரிசோதனைக்குப் பின்னர், பவதாரிணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முடிக்கப்பெற்று சென்னை விமான நிலையத்திலிருந்து வாகனம் மூலம் அவரது உடலை தி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு இறுதி அஞ்சலிக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் திரைத்துறையினர் பலரும் பின்னணி பாடகியான பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவால் காலமானார்..