சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை பள்ளியின் ஆசிரியர்கள் கணக்கெடுத்து அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் மற்றும் காலணிகள், அவர்களுக்கு பொருத்தமான வகையில் இல்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் நலத்திட்டங்களை பெறுவதற்குரிய புள்ளிவிபர தகவல்களை அளிப்பதிலேயே அதிக நேரம் செலவிடப்படுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செருப்பு மற்றும் ஷூ வழங்க, அவர்களின் பாத அளவுகளை இனி, 'இல்லம் தேடி கல்வி' திட்டப் பணியாளர்கள் மூலம் கணக்கீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் காலணிக்குரிய அளவெடுப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலர் நேற்று (பிப்.2) அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாடு அரசால் விலையில்லா நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளும் (Footwear), 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஷூக்களும் (Shoes) வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு வழங்கப்படும் காலணிகள் மற்றும் ஷூக்கள், மாணவர்களின் கால்களுக்கு சரியாக பொருந்தும் வகையில் கால் பாதங்களை அளவெடுப்பதற்கான பணிகள், நேரடியாக அப்பள்ளிகளுக்குச் சென்று மேற்கொள்ளப்பட உள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் விருப்பம் உள்ள தன்னார்வர்களை கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒரு தன்னார்வலர் அதிகபட்சமாக 500 முதல் 600 மாணவர்களுக்கு கால் பாத அளவீடு செய்வதற்கேற்ப, பள்ளிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு பள்ளியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், ஒரு தன்னார்வலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒதுக்கீடு செய்துதர வேண்டும்.
மேலும், அவ்வாறு ஒதுக்கீடு செய்யும் போது அப்பள்ளிகள் தன்னார்வலர் பயணிக்க ஏதுவாக இருக்கும் படி, அருகில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் சென்று, ஒவ்வொரு மாணவருக்கும் கால் பாத அளவீடுகளை சென்டிமீட்டரில் (cm) சரியாக குறிக்க வேண்டும். குறிக்கப்பட்ட கால் பாத அளவீடுகளை, தன்னார்வலர்கள் தங்களுடைய ITK செயலியின் மூலம் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாணவரின் கால் அளவீடுகளும் வகுப்பு வாரியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் உள்ள 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் கால் பாத அளவீடு செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் சென்று பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மாணவர்களின் கால் பாத அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பணியினை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு மாணவர் ஒருவருக்கு அளவீடு செய்ய ரூ.2 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கால் பாத அளவீடுகளை ITK செயலி மூலம் தன்னார்வலர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விஷால்-லைகா விவகாரம்; ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணனை நியமித்த சென்னை உயர் நீதிமன்றம்!