சென்னை: காப்புரிமை விவகாரத்தில், கடந்த முறை வாதத்தின் போது, இளையராஜா தாரப்பில் ‘ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான்” என கூறியிருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனது உரிமை தான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தாகவும், மற்றபடி அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தை மதித்து நடக்கக்கூடியவர் நான், என்று இளையராஜா தரப்பில் இன்று (ஏப்.17) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும், இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும், எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.