சென்னை: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, அவர்கள் உடமைகளையும் பரிசோதித்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் அருகில் உள்ள பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முகமது மூபின் (28) என்பவரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, அவர் வைத்திருந்த ஒரு பெரிய கூடையை பிரித்துப் பார்த்தனர். அதில் சிவப்புக் காதுகளுடைய அரிய வகை ஆமைகள் மற்றும் ஆப்ரிக்க நாட்டின் அரிய வகை ஆமைகள் உயிருடன் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அவரிடம் மொத்தம் 493 ஆமைகள் இருந்துள்ளன. அதில், 484 சிவப்பு காதுகள் கொண்ட அரிய வகை ஆமைகள், ஆப்ரிக்கா நாட்டின் 9 அரிய வகை ஆமைகள் இருந்துள்ளது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்தப் பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர்.
மேலும், அவர் கொண்டு வந்த ஆமைகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த ஆமைகளை மதுரை மாநகரில் உள்ள ஆயுதப்படை காவலர் ரவிக்குமார் என்பவர் சொல்லி அனுப்பியதின் பெயரில், கடத்தி வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர், மதுரை சென்று, அங்குள்ள தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் ஆறாவது பட்டாலியனில் தலைமைக் காவலராக பணியாற்றக்கூடிய, ரவிக்குமார் என்பவரை கைது செய்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு இன்று அதிகாலை அழைத்து வந்தனர்.
இதையடுத்து தலைமைக் காவலர் ரவிக்குமார் மற்றும் முகமது மூபின் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இதே போல் வெளிநாடுகளில் இருந்து அபூர்வ வகை உயிரினங்களை கடத்திக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், தலைமைக் காவலர் ரவிக்குமார் ஏற்கனவே, இதேபோல் நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த ஆமைகள் அனைத்தும் மருத்துவ குணம் உடையவை. எனவே, மருந்துகள் தயாரிப்பதற்கு மற்றும் பெரிய பங்களாக்களில் தொட்டிகளில் அலங்கார உயிரினமாகவும் வளர்க்கின்றனர். மேலும், இந்த ஆமைகளை வீடுகளில் வளர்ப்பது அதிர்ஷ்டம் என்று சிலர் கருதுகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த சிவப்புக் காதுகள் கொண்ட அபூர்வ வகை ஆமைகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகமாக காணப்படுகின்றன.
அதேபோல், ஆப்பிரிக்கா நாட்டு அபூர்வ ஆமைகள், ஆப்பிரிக்க கண்டங்களில் இருக்கும் அடர்ந்த வனப் பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து அபூர்வ வகை ஆமைகள் கடத்திக் கொண்டு வந்த வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த போலீஸ் தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலுக்கு முன்பு இலக்கை அடைந்த வைகை எக்ஸ்பிரஸ்.. இதே அட்டவணையில் இயக்க பயணிகள் கோரிக்கை! - Vaigai Express