சென்னை:சென்னை ஐஐடியில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதற்கும், ஐஐடி மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற அனுபவத்தை நேரடியாகப் பெறும் வகையில் நேரடி செயல்விளக்க நாள் நிகழ்வை நடத்துகிறது.
தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், ஆதாரங்களில் இருந்து நேரடியாக உண்மையான, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை ஐஐடியின் புதிய துறையான தி வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (The Wadhwani School of Data Science and Artificial Intelligence) அறிமுகப்படுத்தியுள்ள பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுப் (B.Tech in Artificial Intelligence and Data Analytics) படிப்பு உள்ளிட்ட மாற்றங்கள் குறித்தும் மாணவர்கள் தெளிவு பெறலாம்.
வருகை தர முடியாத மாணவர்கள் ஜூன் 17ஆம் தேதியன்று ஆன்லைன் அமர்வில் கலந்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை சுற்றியுள்ள தேர்வர்கள் ஜூன் 11 அன்று பெங்களூருவில் உள்ள SD ஆடிட்டோரியம், ஜூன் 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள T-Hub ஆகிய இடங்களில் நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால் ஜேஇஇ தேர்வர்களில் ஆர்வமுள்ளவர்கள் www.askiitm.com/demo என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, “இளம் குழந்தைகள் தங்களது வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய இது ஒரு மிக முக்கிய தருணமாகும். அவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். இளம் குழந்தைகள் அவ்வாறு முடிவு செய்வதற்கு முன்பே எங்களது வளாகத்தைப் பார்வையிடச் செய்து, பல்வேறு பொறியியல் மற்றும் பிற துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஐஐடிஎம் (IITM) வழங்குகிறது.
AskIITM முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் செயல் விளக்க நாள் நிகழ்வை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் தான் வடிவமைத்து இயக்கி நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்வுகள் மட்டுமின்றி இங்குள்ள படிப்புகள், ஆசிரியர்கள், வளாக வாழ்க்கை, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து askiitm.com இணையதளத்தில் தேர்வர்கள் கேள்விகளைக் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் குழுவினர் இவற்றுக்கான விடையளிப்பார்கள்.
ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ள பதில்களையும் தேர்வர்கள் கண்டறியலாம். இவை தவிர, பல்வேறு தலைப்புகளில் Instagram மற்றும் YouTube ல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை ஐஐடியில் தற்போதைய கல்வித் திட்டத்தில் விருப்பப் பாடமுறை மூலமாக மாணவர்களுக்கு தங்களின் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக உயர்ந்த நெகிழ்வுத் தன்மையை வழங்கி வருகிறது. மாணவர்கள் தங்களின் படிப்புகளில் 40-50 சதவீதம் வரை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
இதில் வேறெந்தத் துறையில் இருந்தும் தேர்வு செய்யும் வாய்ப்பும் அடங்கும். மாணவர்கள் தனிப்பாடத்திற்கோ (Minor) அல்லது இடைநிலை இரட்டைப் பட்டத்துக்கோ (IDDD) மாறிக் கொள்ள முடியும். இந்த நெகிழ்வுத்தன்மை காரணமாக பாடப்பிரிவு கிளை மாற்றம் என்ற முறையே இனி தேவையில்லை என ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் பட்டம்பெற முடிக்க வேண்டிய கிரடிட்-கள் எண்ணிக்கை 432-ல் இருந்து 400-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.