சென்னை: சென்னை தொழில்நுட்பக் கழகம், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக மின்வாகனப் போக்குவரத்து எனப்படும் இ-மொபிலிட்டியில் தொழில் சார்ந்த இணையவழி எம்.டெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில் வல்லுநர்களுக்கான உள்ளடக்கங்கள் இடம்பெற்றிருப்பது பாடநெறியின் தனித்துவம் வாய்ந்த அம்சமாகும். கல்வி மற்றும் தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த எம்.டெக் பாடத்திட்டம், தொழில்துறையின் தேவை அடிப்படையில் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள இப்பிரிவில் சேர்வதற்கு, மே 26ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம். பாடத்திட்டம் குறித்த விவரங்களை https://code.iitm.ac.in/emobilityஎன்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டம் குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறும்போது, “இ-மொபிலிட்டி களத்தில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் மூலம் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அளிப்பதில் சென்னை ஐஐடி முன்னணியில் இருந்து வருகிறது. இப்பாடத்திட்டத்தின் இயற்கையான பின்தொடர்தலாக எம்.டெக் படிப்பைத் தொடங்க வேண்டும் என பங்கேற்பாளர்களும், மோட்டார் வாகனத் தொழில்துறையினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.