சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று, பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில், “12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கிறது. அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நம் தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவர் எம்ஐடியில் படித்து நாட்டின் மிஷன் மேன் ஆனவர் அப்துல் கலாம். அதேபோல், அரசுப் பள்ளியில் படித்து தற்போது சென்னை ஐஐடியின் ஏரோபேஸ் இன்ஜினியரிங் படிக்கப்போகும் பார்த்த சாரதி இந்த நூற்றாண்டின் அப்துல் கலாமாக வருவார். பிஎஸ் டேட்டா சயின்ஸ் (B.S.Data Science) பாடத்தில் 2021-ல் 27 மாணவர்கள் இருந்தனர். 2022ல் 115 ஆக உயர்ந்தது. 2023ல் 147 அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் படிக்கின்றனர். ஆயிரம் மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிக்க வேண்டும் என்பது கனவு.
கல்வியில் 2 துறைகள், முக்கியமாக நாட்டிற்கும் தேவையாக உள்ளது. டேட்டா சயின்ஸ் (Data Science), ஏஐ (AI), அடுத்ததாக எலக்ட்ரானிக்ஸ் (Electronics) பாடப்பிரிவும் முக்கியமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாட்டிற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. அதற்கு தேவையான மனித வளத்தையும், வேலைத்திறன் பெற்றவர்களையும் உருவாக்கவும் தமிழ்நாடு அரசும், சென்னை ஐஐடியும் உறுதுணையாக இருக்கும்.