சென்னை:இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு இந்தாண்டு கடந்த மே 5ஆம் தேதி வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட மொத்தம் 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 மையங்களில் நடந்தது. இதில் சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியான நிலையில் வினாத்தாள் கசிவு, முடிவுகளில் குளறுபடி, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சையைக் கிளம்பியது.
இதனால் சிபிஐ கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, தேர்வு குறித்து விசாரணை நடத்தி வருவது ஒரு புறமிருக்க, இனி வரும் ஆண்டுகளில் நம்பிக்கையான முறையில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த நீட் சீர்திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்ட குழுவிற்கு உதவுவதற்கு சென்னை ஐஐடி முன்வர தயாராக இருப்பதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். ஜேஇஇ தேர்வு நடத்திய அனுபவத்தில் தேர்வு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும், வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தேர்வு நடத்தும் முறைகள் குறித்தும் நீட் சீர்திருத்த குழுவிடம் ஆலோசிக்கலாம் என்றார் அவர்.
மேலும், இது குறித்து ஈடிவி பார்த்திற்கு சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அளித்த சிறப்பு பேட்டியில், “இளநிலை நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு என கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிற்கு 3 பணிகள் உள்ளது.
சவாலான தேர்வு நடத்தும் முறை:முதலில் தேர்வு நடத்துவதற்கான முறைகளை வடிமைக்க வேண்டும். அதில் விண்ணப்பங்களை பெறுவது, கேள்வித்தாள் தயார் செய்வது, அதனை எங்கு அச்சடிப்பது, அதனை பாதுகாப்புடன் எங்கு, எப்படி கொண்டு செல்வது, மேலும் தேர்வு நடந்து முடிந்த பிறகு விடைத்தாள் திருத்தம் செய்யும் முறைகள் போன்றவற்றையும் வடிவமைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தம் செய்த பின்னர் மாணவர்களிடம் மதிப்பெண்களை சரிபார்க்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன் பின்னர் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இந்த செயல்களை மேற்கொள்வதற்கு ராக்கெட் லாஞ்ச் செய்வது போன்று சவாலுக்குரியது.
நீட் சீர்திருத்தக் குழுவும், ஆலோசனையும்: இதனால்தான் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனை இந்த நீட் சீர்திருத்தம் தொடர்பான குழுவுக்கு தலைவராக நியமித்துள்ளனர். இவர் ஐஐடி கான்பூர் போர்ட் ஆப் கவர்னராக இருப்பவர். ஆகையால், இவருக்கு இதுகுறித்த தகவல்கள் நன்றாகத் தெரியும். அவரின் தலைமையில் ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் உள்ளனர். பேராசிரியர் ராமமூர்த்தி சென்னை ஐஐடியில் 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஜேஇஇ தேர்விலிருந்து இருக்கிறார். தேர்வு நடத்தப்படுவதில் டேட்டா செக்யூரிட்டி புராடோட்டக்கால் யாருக்கு தெரிய வேண்டும் என்பது உள்ளது. கேள்வித்தாள் தயார் செய்வது முதல், அதனைக் கொண்டு செல்வது வரையில் எந்த நிலையில் யாருக்கு தெரிய வேண்டும் என்பதில்தான் இருக்கிறது தேர்வின் நம்பகத்தன்மை. எனவே, அதனை சரியாகச் செய்ய வேண்டும்.