தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவுஹாத்தி பல்கலையில் தமிழ் பாடப்பிரிவு தொடங்க கேட்டுள்ளேன்; விரைவில் தமிழ் கற்று உங்கள் முன் பேசுவேன் - ஆளுநர் ஆ.என்.ரவி - RN Ravi about Tamil - RN RAVI ABOUT TAMIL

RN Ravi: தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்பதே விருப்பமாகும் எனவும், ஒரு நாள் அதேபோல பேசுவேன் என்றும் தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி (credit - RAJ BHAVAN TAMIL NADU X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 4:23 PM IST

சென்னை:தமிழ்நாடு இந்தி சாகித்ய அகடாமி மற்றும் டிஜி வைஷ்ணவ் கல்லூரி இணைந்து நடத்திய இந்தி தேசிய கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி, அரும்பாகத்தில் உள்ள டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்தி சாகித்ய அகடாமியின் விருதுகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது; தமிழ் பழமையான மொழி, அழகான மொழி, சக்தி வாய்ந்த மாெழியாக இருக்கிறது. தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும். அதுவே எனது விருப்பமாகும். ஒரு நாள் அதுபோல பேசுவேன். தமிழ் இனிமையான மொழி, தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் தொடர்பு கொண்டு தமிழ் பட்டயப் படிப்பை தொடங்க வேண்டுமென கேட்டுள்ளேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழை கற்றுக்கொள்கிறேன். நான் தொடக்க நிலையில் தான் இருக்கின்றேன். தமிழ் செய்தித்தாள்களைப் படிக்கின்றேன், தமிழில் பேசினால் புரிகிறது. பேசுவது சிரமமாக உள்ளது. ஒரு நாள் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். என் காது கேட்கும் தூரத்தில் யாராவது தமிழில் பேசினால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரதமர் மோடியும் தமிழைக் கற்று வருகிறார். நான் திருக்குறள், பாரதியார் கவிதைகளை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல ஆர்வமாக இருக்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாம் போதுமானதை செய்யவில்லை. அப்போது, இந்தியா 6வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. அதைத் தொடர்ந்து 60 ஆண்டுகளில் 11வது இடத்திற்கு வந்துவிட்டோம். 65 ஆண்டுகளாக பின்னோக்கிச் சென்று விட்டோம். நமது நாட்டின் பலம் தவிர்க்கப்பட்டது. நாம் வறுமை ஒழிப்பை குறித்துப் பேசினோம். கல்வியை பரப்பினோம். ஆனால், இன்னும் படிக்காதவர்கள் பலர் இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.

உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்தியா 7 சதவீதம் வளர்ந்து இருக்கிறது. 300-400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தது. இன்றோ 1,25,000 புத்தாக்க நிறுவனங்கள் இருக்கிறது. அவற்றில் 20 சதவீதம் நிறுவனங்கள் யூனிகான் நிறுவனங்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லித் தந்தனர். ஆனால், அதை நாம் வெளியே கொண்டு செல்லவில்லை. ராணுவ பலம், ஆன்மீக பலம் அனைத்தும் மூலமாக வெளியே கொண்டு செல்ல வேண்டும். மாணவர்கள் பல்வேறு துறைகளை தேர்வு செய்திருக்கலாம். உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் பாடுபடுங்கள்.

உங்கள் துறையில் சிறந்து விளங்குங்கள். பெண்கள் முன்னுக்கு வராமல் நாடு வளர்ச்சி அடையாது. வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. யாரும் தேங்கிவிட வேண்டாம். முன்னேறிச் செல்லுங்கள். 2047, இந்த நாட்டுக்காக என்ன செய்தேன் என்று யோசித்துப் பாருங்கள். எதிர்மறை எண்ணங்கள் வருவதை தவிருங்கள், பலர் மொழிகளாலும், மதங்களாலும் பிரிவினையை உண்டாக்குவார்கள். நாம் அதில் பாதிக்கப்படக்கூடாது. அந்த எதிர்மறை எண்ணங்களுக்கு எதிராக போராட வேண்டும்'' என இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"எனது குழந்தை உயிரோடு இருக்கா என்று கூட தெரியவில்லை" - காவலர் மனைவி போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா!

ABOUT THE AUTHOR

...view details