சென்னை:உலக செஸ் சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரரைத் தேர்வு செய்வதற்கான 'பிடே கேண்டிடேட்ஸ்' (FIDE Candidates 2024) சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோண்டோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் குகேஷ்.
இதன் மூலம் இளம் வயதில்(17) 'பிடே கேண்டிடேட் செஸ்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை விரைவில் எதிர்கொள்ள உள்ளார் குகேஷ்.
இந்தநிலையில் கனடாவில் இருந்து சென்னை திரும்பிய குகேஷுக்கு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அவர் படித்து வரும் பள்ளி சார்பில் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் கூறுகையில், "கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது எனக்கு சிறப்பான சாதனை. கேண்டிடேட்ஸ் தொடரில் ஆரம்பம் முதலே நல்ல நிலையில்தான் இருந்தேன். 7வது சுற்றில் தோல்வி அடைந்தது என்னை பாதித்தாலும் அதிலிருந்து வெளியேறி இந்த தொடரை கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் விளையாடினேன்.
செஸ் போட்டியைப் பொதுமக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு நடத்திய 'சென்னை கிராண்ட் மாஸ்டர்' தொடரில் விளையாடுவதற்கு எனக்கு கடைசி நேரத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர்தான் எனக்கு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
இந்த தொடரை நடத்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விஸ்வநாதன் ஆனந்த் என்னுடைய ரோல் மாடல், அவர் வழங்கிய ஆலோசனைக்கு நன்றி. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீரர் டிங் லிரென் வலிமையான வீரர். இருப்பினும் உலக சாம்பியன்ஷிப் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மேலும் உலக சாம்பியன்ஷிப் போட்டியை விளையாடுவதற்கு மிகுந்த ஆவலுடன் உள்ளேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:குகேஷை கண்காணிக்க சிறப்பு குழு... பயிற்சி முறைகள் என்ன? - பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னாவின் பிரேத்யேக பேட்டி!