தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேதமடைந்த பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்! - I Periyasamy answer TN Assembly

I Periyasamy: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், எந்தெந்த அரசுப் பள்ளிகள் சேதமடைந்து இருக்கின்றதோ, அதனை ஆய்வு செய்து புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.

TN Assembly
சட்டப்பேரவை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 12:24 PM IST

சென்னை:இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2024, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 4வது நாள் அமர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, குன்னத்துப்படி ஊரில் உள்ள பல்வேறு பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதை சரிசெய்து கட்டடம் கட்டித்தர அரசு ஆவணம் செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 400 பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், மேலும் 6 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுமார் ரூ.190 கோடி செலவில் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் புதுப்பித்தல், பழுது நீக்கியும் தரப்பட்டு இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தங்களுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச்சுவர், மாணவிகளுக்கு கழிப்பறை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “சுமார் 8 ஆயிரத்து 500 பழுதடைந்த பள்ளிகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்து, பழுதடைந்த கட்டடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்து அதனையும் சரி செய்ய தயாராக இருக்கின்றோம். பெரும்பாலான பள்ளி கட்டடங்கள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பள்ளிகளுக்கு, 1,200 வகுப்பறைகள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும், பழுதடைந்த பள்ளி குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

பின்னர், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், அங்கு பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், அங்கு தற்போது இரண்டு வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், எனவே இரண்டு பள்ளிகளுக்கும் புதிய கட்டடம் கட்டித்தர முடியுமா என்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் முழுமையாக கண்டறிந்து இடிக்கப்பட்டிருப்பதாகவும், சிறு சிறு பகுதிகள் நீக்குவதற்கு 8 ஆயிரத்து 500 பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்து, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், எந்தெந்த பள்ளிகள் சேதமடைந்து இருக்கிறதோ, அதனை ஆய்வு செய்து புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் 4ஆம் நாள் அமர்வு!

ABOUT THE AUTHOR

...view details