ராணிப்பேட்டை:மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சித்ரா (32). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆர்கே பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (41) என்பவருக்கும் கடந்த 10-வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதில் குழந்தைகள் இருவரும் தாய் சித்ராவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சித்ரா நேற்று இரவு வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரம் செய்து கொடுத்து இருந்துள்ளார்.
இதையும் படிங்க:மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
அப்போது முகமூடி அணிந்தபடி வந்த ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து சித்ரா மீது ஊற்றி உள்ளார். அப்போது அடுப்பு பகுதியில் சித்ரா இருந்ததால் தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இதனால் அலறிய சித்ரா, தன் மீது பெட்ரோல் ஊற்றிய நபரையும் இறுக்கி அணைத்து கொண்டு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து தீயை அணைத்துள்ளார். பின்னர் முகமூடி அணிந்து வந்த நபர் சித்ராவின் கணவர் பாலாஜி என தெரிய வந்தது.
இதனையடுத்து பொது மக்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்த கணவன் திடீரென வந்து மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சித்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்