தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு ஆலை வெடி விபத்து; கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மானம் காத்த நபர்! - Sivakasi Cracker Factory Explosion - SIVAKASI CRACKER FACTORY EXPLOSION

Sivakasi fire accident: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கிய பெண்ணின் மானம் காக்க, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தான் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துப் போர்த்தியுள்ளார். இந்த வெடி விபத்தில் 9 பேர் இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த இடம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் புகைப்படம்
விபத்து நடந்த இடம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 9:06 PM IST

விருதுநகர்:பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கிய பெண்ணின் உடைகள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில், படுகாயமடைந்த அவரை ஆடையின்றி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அப்போது அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுக்கிரவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவி பாண்டியம்மாளின் கணவர் மாரீஸ்வரன் தான் அணிந்திருந்த லுங்கியை அவிழ்த்து அவர் மீது போர்த்தியுள்ளார். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட பட்டாசு அறைகள் உள்ளன. இன்று வழக்கம் போல 50 மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (மே.09) பிற்பகல் இந்த பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இதன் அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த திருத்தங்கல், வடமலாபுரம், சோரம்பட்டி, அதிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்தனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களையும், உயிருக்கு போராடியவர்களையும் மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து அருகில் உள்ள கிராம மக்களும் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

அவருடைய உடைகள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில், தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் இருக்கும் பகுதிக்குத் தூக்கி வந்தனர். அப்போது அவரது உடலில் துணி இல்லாததைக் கண்ட சுக்கிரவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவி பாண்டியம்மாளின் கணவர் மாரீஸ்வரன், தான் அணிந்திருந்த லுங்கியை அவிழ்த்து பெண்ணின் மீது போர்த்தி விட்டார்.

அது மட்டுமின்றி தீயணைப்புத் துறையினருடன் இணைந்து அப்பெண்ணைப் பத்திரமாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார். இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காதை பிளந்த சத்தம்.. சிதறிய உடல்கள்.. 9 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன? - Sivakasi Cracker Factory Explosion

ABOUT THE AUTHOR

...view details