தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள கூவன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்(28). இவர் ஜான்சிராணி கீதா(27) என்ற இளம் பெண்ணை கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்னர் இருவரும் சாத்தான்குளம் அருகே தைலாபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று, வீட்டிற்குத் திரும்பிய போது கணவர் அந்தோணி ராஜ் மட்டும் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஜான்சிராணி உறவினர்கள் நாசரேத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் அதே தினத்தில் வீட்டிற்கு வந்த கணவர் அந்தோணிராஜ் தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று சாத்தான்குளம் அருகே உள்ள இடச்சிவிளை எம்.எல்.தேரிகாட்டு பகுதியில் ஒரு இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அழுகிய நிலையில் கிடந்தது, ஜான்சிராணி கீதா உடல் தான் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
திருமணமாகி அந்தோணிராஜ், ஜான்சிராணி கீதா இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி வெளியே செல்லலாம் என்று தனது மனைவி ஜான்சிராணி கீதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திசையன்விளை நோக்கிச் சென்றுள்ளார். அதற்கு முன்னதாக தனது குழந்தைகள் இருவரையும் மனைவி வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்.