தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வரும் 14ம் தேதி நேரில் ஆஜராகுங்கள்" - சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களிடம் பேசுவேன் என்றார். இதன் அர்த்தம் குறித்து பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் (Credit - ETV Bharat TamilNadu)

சென்னை: ரவுடிகளிடம் அவர்கள் மொழியில் பேசுவேன் என கூறியது தொடர்பாக, வரும் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, சென்னை மாநகர காவல் ஆணையர் அருணுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை, பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.

இவர் பதவியேற்றபோது, ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சில ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யட்டும் உள்ளனர்.

இந்நிலையில் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன் சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் உள்ள ரவுடி ஒருவர் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் இனி எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது எனவும், மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கை, கால்கள் உடைக்கப்படும் எனவும் எச்சரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது கோவை போலீசில் புகார்.. பின்னணி என்ன?

உதவி ஆணையர் இளங்கோவன் இவ்வாறு பேசியதை அப்பகுதியில் உள்ள நபர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலான நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில், காவல் உதவி ஆணையர் இளங்கோவன் மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது ரவுடிகளை குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாக பேசியது எனவும், வேறு ஏதும் நோக்கமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த ஜூலை 7-ம் தேதி, சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களிடம் பேசுவேன் என பேட்டியளித்தார். இந்நிலையில் இதன் அர்த்தம் என்னவென்றும், இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம், சென்னை காவல் ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

அதில் வரும் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details