சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் வைணவ ஆய்வு மையம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இணைந்து நடத்திய முதுகலை வைணவம் மற்றும் முதுகலை ஶ்ரீ பாஷ்யம் ஆகிய வைணவப் பாடங்களில் தேர்ச்சி பெற்ற 65 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இந்த பள்ளி இராமானுஜர் ஆயிரம் ஆண்டு நினைவை ஒட்டி தொடங்கப்பட்டது. இதில் 25 வயது முதல் 85 வயது உள்ளவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இதன் மூலம் படிப்புக்கும், பக்திக்கும் வயது வரம்பில்லை என்று தெளிவாகிறது.
இந்த சமய அறநிலையத் துறைக்கு கீழ் இயங்கும் பள்ளிகளில் காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின் தான் ஆயிரத்து 921 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான நிலங்கள் மீட்கப்பட்டு மீண்டும் திருக்கோயில் திருப்பணிகளுக்காக நிலங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.
அய்யர்மலை ரோப்கார் விவகாரம்:அதன் பின்னர், கரூர் அய்யர்மலை ரோப்காரில் பக்தர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டம் முடக்கப்பட்டிருந்தது. முதல்முறை ரோப் கார் இயக்கப்பட்டதால் காற்றின் வேகத்தை கணிக்க முடிவில்லை.
இதனால் ரோப்கார் கயிற்றில் இருந்து விலகி செயல் இழந்து விட்டது. உடனடியாக தொழில்நுட்பவியல் வல்லுநர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். காற்றின் வேகத்தைக் கண்காணிக்க ரோப் கார் தொடங்கி முடியும் இரண்டு இடங்களிலும் கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காற்றின் வேகம் 30 கி.மீ அதிகமாக இருந்தால், ரோப் கார் பயணத்தை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.