தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் கோயில் கொடிமரம் விவகாரம்: அறநிலையத் துறை நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி என்ன?

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 4:28 PM IST

சென்னை:சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடிமரத்தை அகற்றி விட்டு, புதிய கொடிமரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860 ஆம் ஆண்டு பிரச்சனை
ஏற்பட்டதாகவும், இது சம்பந்தமான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. அதன்படி கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்வது எனவும், எந்த பூஜையும், பிரம்மோற்சவ விழாவும் நடத்தக் கூடாது என சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவம் நடத்தப்படவில்லை என்றும், தற்போது கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைப்பது, முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல், சடங்கு - சம்பிரதாயங்களுக்கு எதிரானது என்பதால், தில்லை கோவிந்தராஜர் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் புதிய கொடி மரத்தை அமைத்துவிட்டு பின்னர் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது என்பதால் புதிய கொடிமரத்தை அமைக்க கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை மறுத்த அறநிலையைத் துறை தரப்பு வழக்கறிஞர் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணை நிலுவையில் உள்ளதால், தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என்றும், கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

அதையடுத்து, இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அறநிலையத்துறை தரப்பின் இந்த வாதம் குறித்து ஆணையர் ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: “கல்லூரி மாணவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது?” - நீதிமன்றம் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details