வாட்டி வதைக்கும் வெயிலின் நடுவே இளைப்பாறுவது எப்படி கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரு நாட்களாக ஈரோடு, சேலம் மாவட்டத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி, இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான பகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேலும், தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக வெயில் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த இரு நாட்களில் 104, 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, வழக்கத்திற்கு மாறாக உள்ள வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள கோயம்புத்தூர்வாசிகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
குறிப்பாக, உடல் சூட்டைத் தணிக்க இளநீர், மோர், கம்மங்கூழ் போன்றவற்றை தொடர்ச்சியாக பருகி வருகின்றனர். இதில் அதிகமாக வெளியே சுற்றும் மார்க்கெட்டிங் மற்றும் கலக்ஷென் பணியில் உள்ளவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இளநீர், தர்பூசணி உள்ளிட்ட இயற்கை பானங்களே கை கொடுப்பதாக கூறுகின்றனர்.
மேலும், வெயில் குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கோவை என்றாலே குளுமை என்ற பெயர் உண்டு. ஆனால், கடந்த ஒரு மாதமாக கோயம்புத்தூரில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது. ஆனால், வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக வேறு மரங்கள் வளர்க்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.
மேலும், சூட்டைத் தணிக்க இளநீர், கம்மங்கூழ் போன்ற இயற்கை பானங்கள் அருந்துகிறோம். முன்பு எல்லாம் கோயம்புத்தூர் என்றாலே சில்லென்று இருக்கும் என கூறுவார்கள். ஆனால், தற்போது வெயில் கொடுமையால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றோம். முடிந்தவரை மதிய நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும், வீடுகளில் மரங்களை வளர்க்க வேண்டும். அது தவிர, கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள குளங்களில் தண்ணீர் வற்றி விட்டதால், பறவைகள் குடிப்பதற்கு நீரின்றி அவதிப்படுகின்றன.
ஆகவே, வீடுகளில் சிறிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் வைப்பதன் மூலம் பறவைகளின் தாகம் தீர்க்க முடியும். கோயம்புத்தூரில் பிரபலமாக உள்ள இளநீர், சர்பத் அதிகமாக விற்பனையாகிறது” எனத் தெரிவித்தனர். இதனிடையே, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிமையான டிப்ஸ்! - Summer Safety Tips