தென்காசி: தென் தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் இன்று (மே 17) காலை முதல் பலத்த மழை பெய்தது. அந்த வகையில், தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப்பகுதியில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்தது.
பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளம்: மிதமான மழை பெய்வதால் பழைய குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிற்பகல் சரியாக 2 மணி அளவில் கனமழை பெய்த நிலையில், மலையிலிருந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து, அருவியில் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியது. இதனையடுத்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடத் தொடங்கினர்.
பொதுவாக பழைய குற்றாலம் அருவியைப் பொறுத்தவரை, இதுபோன்று காட்டாற்று வெள்ளம் வரும்போது அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர், அருகில் மக்கள் நடந்து செல்லும் வழிப்பாதையில் ஆறு போல் ஓடும். அந்த வகையில். இன்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளமும் மக்களின் நடை பாதையை நோக்கி பெருக்கெடுத்து ஓடியதால் குழந்தைகள், முதியவர்கள் உடன் குளிக்க வந்த பொதுமக்கள் அருவியில் இருந்து ஓடத் தொடங்கினர்.
அந்த நேரத்தில், பள்ளி விடுமுறை காரணமாக தனது உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் அஸ்வின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னர் காட்டாற்று வெள்ளம் வருவதைப் பார்த்து அனைவரும் ஓடிய போது, சிறுவன் அஸ்வினும் தனது உறவினர்களுடன் செல்லாமல் தனியாகச் சென்றுள்ளார்.
இதனால், வெள்ளத்தின் வேகத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்து கீழே விழுந்துள்ளார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் வலது புறம் உள்ள 30 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் சிறுவனை இழுத்துச் சென்றுள்ளது. அங்கு இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு கடும் பாறைகளுக்கு இடையே சிறுவன் வெள்ளத்தில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உறவினர்கள் அஸ்வினை காணவில்லை என தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது, அருகில் இருந்தவர்கள் சிறுவன் ஒருவர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்பே அஸ்வின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என உறவினர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பிற்காக வந்த எஸ்.பி.சுரேஸ் குமாரிடம் உறவினர்கள் அஸ்வின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது குறித்து தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியாக, பழைய குற்றால அருவியிலிருந்து 800 மீட்டர் தூரத்திலுள்ள இரட்டைப் பாலம் என்ற இடத்தின் அருகே சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். உடனடியாக, அஸ்வின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
விடுமுறையைக் கொண்டாட வந்தபோது நேர்ந்த சோகம்: அஸ்வின், நெல்லை மாநகரப் பகுதியான என்ஜிஓ காலனியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்புக்குச் செல்ல உள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால், மூன்று நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேலகரத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், தற்போது குற்றாலத்தில் தண்ணீர் வரத்து இருப்பதால், உறவினர்கள் அஸ்வினை அழைத்துக் கொண்டு பழைய குற்றாலத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பது என்ன? தென்காசி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் அருகில் இருக்க வேண்டாம், நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதேநேரம், குற்றாலத்தில் குளிக்க தடை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில்தான், அஸ்வினின் குடும்பத்தினர் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். அங்குள்ள கடைகளில் விசாரித்த போது, அருவியில் தண்ணீர் வருகிறது என்று கூறியதும் நேராக அருவிக்குச் சென்றுள்ளனர்.
சிறுவன் உயிரிழந்தது குறித்து ஆட்சியர் கூறும்போது, "பொதுவாக கனமழை எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் நீர்நிலை அருகில் செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அரசின் எச்சரிக்கை மீறிச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்தாண்டும் பழைய குற்றால அருவியில் நான்கு பேர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்தனர். எனவே, உயிரிழப்புகளைத் தடுக்க உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை.. 300 வீரர்களுடன் 10 பேரிடர் மீட்புக்குழு தயார்! - SDRF Actions In TN