சென்னை:18வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்தான இறுதிகட்ட பேச்சு வார்த்தை என்பது இன்று, தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஏற்கனவே உறுதி செய்யபட்டன.
பாமகவிற்கு 10 தொகுதிகளும், அமமுகவிற்கு 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதியும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதியும் உறுதியானது.
இந்நிலையில், இன்று ஆலோசனையில் ஈடுபட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கப்படுவதாகவும், பா.ஜ.க 20 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். அதேபோல, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிளோடு சேர்த்து, நேரடியாக 24 தொகுதிகளில் பாஜக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பாஜகவோடு கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை உறுதி செய்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாளை அறிவிப்பதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணியினர் களம் காண்கிறார்களா அல்லது தேர்தலைச் சந்திக்காமல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது ஆதரவை மட்டும் தெரிவிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ் போட்டியிடவில்லை என்றாலும் கூட, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க உள்ளதாக ஓ.பி.எஸ் அணியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:குட்கா முறைகேடு வழக்கு; “முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கிடைத்துவிட்டது” - சிபிஐ தகவல்! - GUTKA SCAM CASE