சென்னை: இந்தியாவில் 18வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ளதால், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் தொடங்கியுள்ளது. அதன் மூலமாக பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை காவல்துறையால் மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில், சென்னையில் யார் யாரெல்லாம் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளார்களோ, அவர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2,125 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தேர்தல் முடியும் வரை அந்தந்த காவல் நிலைய எல்லையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், துப்பாக்கி உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் துப்பாக்கி ஒப்படைக்கவில்லை என்றால், அந்தந்த எல்லையில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள், அவர்களை துப்பாக்கி ஒப்படைக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க வேண்டுமென காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், துப்பாக்கிகள் ஒப்படைக்கும் நபர்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர். மேலும், தேசியமயமாக்கப்பட்டுள்ள வங்கிகள், தனியார் வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் செய்யக் கொண்டு செல்லும் பொழுது பாதுகாப்புக்கு பயன்படுத்தக்கூடிய துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேர்தல் பத்திரம்: ரூ.650 நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?