தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே திருமணம் மீறிய உறவு.. வீட்டை அடித்து நொறுக்கிய கணவர் குடும்பத்தினர்! - Tirupathur crime - TIRUPATHUR CRIME

CCTV footage of house smashed: ஜோலார்பேட்டை அருகே, திருமணம் மீறிய உறவின் காரணமாக, சம்பந்தபட்ட நபரின் வீட்டின் கதவு, கண்ணாடி, ஜன்னல், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை கணவரின் குடும்பத்தார் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

வீட்டை அடித்து நொறுக்கிய கணவன் குடும்பத்தினர்
திருமணம் மீறிய உறவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 11:00 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவுப் பெண்ணை (27) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஏழு மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராஜேஷின் மனைவிக்கு கடந்த ஓராண்டுக்கு முன் அதே பகுதியைச் செர்ந்த விமல் (47) என்பவருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜேஷ் மனைவியைக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராஜேஷின் மனைவியும், விமலும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, கடந்த 8 மாதங்களாக இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வாணியம்பாடி பகுதியில் இருவரும் தனி குடித்தனம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையறிந்த ராஜேஷ், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் ராஜேஷின் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுத்து, கணவர் ராஜேஷ் உடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் மீண்டும் விமலுடன் சென்றதாகத் தெரிகிறது.

இதையடுத்து இருவரையும் கணவர் ராஜேஷின் குடும்பத்தினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் விவாகரத்து வழங்குவது குறித்து விமல் மற்றும் வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, ராஜேஷின் குடும்பத்தினர் ராஜேஷின் மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் நகரப் போலீசார் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், கடத்தல் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்துள்ளனர். அப்போது, அவர்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி கொவதாக கூறிய ராஜேஷின் மனைவி, தன்னை விமலுடனே அனுப்பி விட வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து விசாரணையை கைவிட்ட போலீசார், இருவரும் உங்கள் பிரச்னையை நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறியுள்ளனர். இதையடுத்து விமல் காவல் நிலையத்திலேயே இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜேஷின் உறவினர்கள், “அவரை எதற்கு உள்ளே வைத்துள்ளீர்கள் அவனுடன் அனுப்ப திட்டம் போடுகிறீர்களா?” என பேசியுள்ளனர்.

தொடர்ந்து ராஜேஷும், தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவல் நிலைய வாசலில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமலை விசாரிக்க ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கும், ராஜேஷின் மனைவியை அருகில் உள்ள பெண்கள் காப்பகத்திலும் ஒப்படைத்து விசாரணைக்குப் பிறகு மேல் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்ந நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் 20க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு விமலின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி, சிசிடிவி கேமரா போன்றவற்றை கல்லால் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜேஷின் குடும்பத்தினர் விமலின் வீட்டை கல்லால் அடித்து சூறையாடிய சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆய்வகப் பணியாளர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

ABOUT THE AUTHOR

...view details