சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர் சுந்தர் மீத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பலத்த காயமடைந்த சுந்தர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாநில கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலும், உயிரிழந்த சுந்தர் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாநில கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "சுந்தர் கொலை வழக்கில் 30க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் அதனை தடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகளால் தான் இந்த கொலை அரங்கேறி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
மாணவர்களின் பாதுகாப்பை பொருட்டு கல்லூரி வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாணவர்கள் வைத்த பல்வேறு கோரிக்களை கேட்டறிந்தார்.