தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்று நீர் தமிழ்நாட்டில் நுழைகிறது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர், தமிழ்நாட்டிற்கு வரும் முதல் பகுதியாக இந்த பிலிகுண்டுலு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்குச் செல்கிறது.
தொடக்கத்தில் பிலிகுண்டுலு பகுதியில் ஆறாக வரும் காவிரி நீர், பின்பு தனது போக்கில் அகண்ட காவிரியாக ஒகேனக்கல் பகுதியில் வழிந்தோடி வந்தது. ஆனால், இன்று அகண்ட காவிரியான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்ட காவிரியாக பாறைகள் நிறைந்து காட்சியளிக்கிறது.
தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் மழைக்காலங்களில் கண்பார்வை எட்டும் தூரம் வரை பறந்து விரிந்த காவிரி ஆறு, எங்கும் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது. அத்தகைய காவிரி ஆறு இன்றைய சூழலில் வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது. லட்சக்கணக்காக கன அடி தண்ணீர் கடந்து சென்ற வெள்ள நீர் இன்று 200 கன அடியாகச் சுருங்கி விட்டது.
ஒகேனக்கல் பகுதியில் ஐந்தருவி, ஐவர் பவனி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீர் வரத்து இல்லாமல் முழுமையாக காய்ந்த நிலையில் உள்ளன. தடுப்புகள் ஏற்படுத்தி மெயின் அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அளவில் சிறிய நீர் ஊற்று போல நீர் ஊற்றி வருகிறது.
வறண்டுபோன ஒகேனக்கல் காவிரி ஆறு இத்தகைய சூழ்நிலையில், தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவியில் ஊற்றுபோல சொட்டு சொட்டாய் நீர் ஊற்றி வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து, ஆற்றோரங்களில் எண்ணெய் மசாஜ் குளியலில் ஈடுபட்டு, பின்பு மெயின் அருவியில் குளித்தும் தங்கள் கோடை விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டோ, தண்ணீரின் அளவு மிக மிகக் குறைவு என்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் செல்கின்றனர். இதுமட்டுமல்லாது, தண்ணீர் வரத்துக் குறைவால் ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், மீன் விற்பனையாளர்கள் என இந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ளவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!