புதுக்கோட்டை:தமிழகத்தில் புதுக்கோட்டைக்கு தனிப்பெருமை உண்டு. ஆம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமாக விளங்கியது.
சமஸ்தானம்:புதுக்கோட்டை மாவட்டத்தில் திகழும் பழமையான கட்டடங்கள் தொண்டைமான் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இன்றளவும் அந்த கட்டடங்கள் தனித்துவம் வாய்ந்தவையாக திகழ்கின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மன்னரின் அரண்மனையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) பல ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனையின் கட்டடத் தோற்றம் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒரு அடையாளமாகவும் திகழ்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் கடந்த 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
தொண்டைமான் மன்னர்களின் 9 ஆவது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் அப்போது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்த நிலையில், மக்கள் விருப்பப்படி அவர் இந்தியாவுடன் சமஸ்தானத்தை இணைத்தார். அப்போது சமஸ்தானத்திலிருந்த கஜானாவோடு, ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திட்ட தங்கப் பேனாவையும் அரசிடம் ஒப்படைத்தார்.
மாநகராட்சியாக தரம் உயர்வு:இத்தகைய சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டை நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவியை பலர் அலங்கரித்த நிலையில், மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால் மேயர் என்ற பெருமையை பெற உள்ளனர்.
புதுக்கோட்டை மாநகராட்சி:புதுக்கோட்டை நகராட்சியில் தற்போது 42 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சியுடன் புதுக்கோட்டையை சுற்றியுள்ள திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை, வெள்ளனூர், திருவேங்கைவாசல், வாகவாசல், முள்ளூர் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் 21.95 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், மக்கள் தொகை 1 லட்சத்து 73 ஆயிரத்து 144-களாக இருக்கும் நிலையில், ஆண்டு வருமானம் 61.38 கோடியாக உள்ளது.
மக்கள்தொகை :ஊராட்சி பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் மொத்த மக்கள்தொகை 2 லட்சத்து 25 ஆயிரத்து 600 ஆகும். மேலும் 121.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டதாகும், இதன் ஆண்டு வருவாயாக 64.21 கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனி ஸ்பாட் பைன்..! எவ்வளவு தெரியுமா?
மாநகராட்சி எதிர்ப்பு :இது மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் 100 நாள் வேலை திட்டம், வரி உயரும், பல்வேறு சலுகைகள் கிடைக்காது என எதிர்ப்பு கிளம்பியது.
திட்டப் பணிகள் :இருப்பினும் மாநகராட்சியாக தரம் உயர்வதன் மூலம் புதுக்கோட்டையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என அரசு அதிகாரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டங்கள், நிதிகள் அதிகம் கிடைக்கப்படும். சாலை வசதி, குடிநீர் வசதி மேம்படுத்தப்படும். வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அண்டை மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூரைப் போல புதுக்கோட்டையும் மாநகராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மேயர் பொறுப்பேற்பு விழா:புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி புதுக்கோட்டை மாநகராட்சிக்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டு புதுக்கோட்டையை மாநகராட்சியாக ஆக்கியது.
இந்நிலையில் நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி தற்போது முழுவதும் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு, சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை போன்று வடிவமைக்கப்பட்டு, மேயர் பொறுப்பேற்பு விழா நாளை (9-ஆம் தேதி) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக விளங்கிய முத்துலட்சுமி ரெட்டியை தந்த புதுக்கோட்டை, தற்போது மாநகராட்சியின் முதல் மேயராகவும், முதல் பெண் மேயராகவும் திலகவதி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்