திண்டுக்கல்:முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில், மலை அடிவாரம் பகுதியில் இருக்கக்கூடிய கடையில் விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு, அதிரசம், உள்ளிட்ட பொருட்கள் கெட்டுப் போனதாகவும், பூசனம் பிடித்தும், பஞ்சாமிர்தம் குறிப்பிட்ட தேதி முடிந்த பின்பும், விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் 7 பேர் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், பழனி அறங்காவல் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் கோயில் இணை ஆணையர் பஞ்சாமிர்தம் தயாரிப்பு கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு, பழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் தரமாக உள்ளது. பஞ்சாமிர்த தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டுள்ள தேதியில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வரை வைத்து பக்தர்கள் பயன்படுத்தலாம்.
50 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள் ஸ்டாக் இருப்பதாகத் தவறான தகவல் அளிக்கப்படுபவர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருமான நோக்கத்துடன் கோயில் நிர்வாகம் செயல்படவில்லை சேவை நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறது என்று பழனி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன் தெரிவித்திருந்தார்.