கோயம்புத்தூர் : சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சையைக் கிளம்பும் வகையில் பாடலை பாடிய இசைவாணிக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கானா பாடகி இசைவாணி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். மேலும், பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ''I am sorry ayyappa'' என்ற பாடலை பாடியுள்ளார். மேலும், இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடி வந்துள்ளார்.
இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானதைத் தொடர்ந்து சர்ச்சையாகி பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு பாஜக ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து, பாடகி இசைவாணியை தமிழ்நாடு காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? என கேள்வியும் எழுப்பினார்.
இது குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கண்டன குரல்களும் எழுந்தன. மேலும், இசைவாணி பாடிய பாடலுக்கு தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் பஜனை பாடிய படி, கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.