சென்னை:பூந்தமல்லி அடுத்த மாங்காடு அம்பாள் நகர், கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ராஜாஜி (45). இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு கலா என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) மாலை குமணன்சாவடி பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, டீக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜாஜியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னர், ராஜாஜியை கொலை செய்த நபர் சர்வ சாதாரணமாகச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தைக் கண்ட கடைக்கு உள்ளே மற்றும் வெளியே இருந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடியதாக தெரிய வருகிறது. இந்த கொலைச் சம்பவம் குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜாஜி உடலை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.