சென்னை: சென்னையில் கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழக அரசு திறந்துள்ளது. அதே நேரத்தில் பூங்காவிற்கு கட்டணம் அதிகம் வசூலிக்கபடுவதாக ஒருபுறம் குற்றசாட்டு எழுந்துள்ளது. இன்னொருபுறம் திறக்கப்பட்ட ஐந்தே நாளில் ஜிப்லைன் எனும் அம்சத்தில் பழுது ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. உண்மை நிலவரம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை மாநகரம் எனும் கான்கிரீட் காட்டுக்கு மத்தியில் பசுமையுடன் கூடிய மனதை கொள்ளை கொள்ளும் இடமாக கலைஞர் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி பூங்காக்கள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், கலைஞர் நூற்றாண்டு பூங்கா சர்வதே தரத்திலான பொழுது போக்கிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் கூட வெயிலால் பாதிக்கப்படும் சென்னை மக்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒரு வரபிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பூங்காவிற்குள் நாம் பயணிக்கும் முன்பு, இப்போது பூங்காவாக இருந்த இடம் இதற்கு முன்பு என்னவாக இருந்தது என்பதைப் பார்க்கலாம்.
நிலத்தை மீட்க நடந்த சட்டப்போராட்டம்: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையில் 23 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கடந்த 1910ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கில அரசு தோட்டக்கலை சங்கம் என்ற அமைப்புக்கு வழங்கியது. அதனை அடுத்து, 1964, 1980ஆம் ஆண்டுகளில் இந்த நிலத்தைத் திரும்பப் பெற அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலத்தின் மீதான அரசின் உரிமையை வேளாண் தோட்டக்கலைச் சங்கம் நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்ட நிலையில் 1980ஆம் ஆண்டில் இந்த நிலம் மீண்டும் அச்சங்கத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் தனிநபர்களின் லாப நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதால் 1989ஆம் ஆண்டில் அந்நிலத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முயற்சிகள் மேற்கொண்டார்.
நூற்றாண்டு பூங்கா காணவந்த பார்வையாளர்களின் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 1998ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று பிறப்பித்த உத்தரவில், நிலத்தை மீண்டும் எடுத்துக்கொண்ட தமிழக அரசின் ஆணையை நீதிமன்றம் ரத்துசெய்தது. அதனை அடுத்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல் வழக்கு நிலுவையில் இருந்த சூழலில், 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கைத் தொடர முடிவுசெய்யப்பட்டது. இதை எதிர்த்து, தோட்டக்கலைச் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கு, 2007ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களின் மீதான வழக்கில், 2008ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள பிறப்பித்த அரசின் ஆணையை ரத்து செய்து தனி நீதிபதி 1998ல் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் தோட்டக்கலைச் சங்கம் தாக்கல் செய்த மேல் முறையீட்டின் இடைக்கால ஆணையில் தோட்டக்கலை மேம்பாட்டுக்காக மீட்கப்பட்ட நிலத்தை அரசு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
செம்மொழி பூங்கா உருவானது:உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து,செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்றன. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை மாதிரியாகக் கொண்டு அதே போன்றதொரு பூங்காவை இங்கும் அமைக்க வேண்டும் என்று பூங்கா கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து 2010ஆம் ஆண்டு செம்மொழி பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
செம்மொழி பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள், மூலிகை தாவரங்கள் என 500 வகையான தாவர வகைகள் வளர்க்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், பொழுது போக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது மலர் கண்காட்சி, உணவு திருவிழா உள்ளிட்டவையும் செம்மொழி பூங்காவில் நடத்தப்பட்டு வருகிறது.
மீதமுள்ள இடமும் மீட்பு:செம்மொழி பூங்கா பொதுமக்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசம் இருந்த மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதுடன் அதில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 6.09 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு பூங்காவை" அக்டோபர் 7-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் சிறப்பம்சங்கள்:கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் சர்வதேச தரத்தில்இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் பயணம், கலைஞர்களின் கலைக்கூடம், 16 மீட்டர் உயரம் மற்றும் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் கண்ணாடி மாளிகை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2600 சதுர அடியில் ஆர்க்கிட் குடில், அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் என பல சிறப்பு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.
தனித்தனி கட்டணங்கள்:பூங்காவினை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு நபர் உள்ளே சென்று அனைத்து சிறப்பு அம்சங்களையும் பார்வையிட வேண்டுமென்றால் உணவு கட்டணத்தைத் தவிர ரூ.650 செலுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தும் 3 மணி நேரத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் கலைஞர் பூங்கா திறப்பு.. சிறப்பம்சங்கள், டிக்கெட் விலை எவ்வளவு?
இந்த சூழலில், கலைஞர் நூற்றாண்டு பூங்காவைப் பார்வையிட்டவர்கள் ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், பிரபு என்பவர் கூறுகையில், "இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா மிகவும் அருமையாக உள்ளது. கொடைக்கானல், ஊட்டியில் இருப்பது போன்று உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற ஒரு இடமாக இருக்கிறது. நுழைவு கட்டணம் இருந்தால் தான் இந்த பூங்காவை பராமரிக்க முடியும். முறையாக பராமரித்தால் நன்றாக இருக்கும். உள்ளே இருக்கும் நிகழ்வுகளுக்கு தனியாக கட்டணம் வசூல் செய்கின்றனர். இங்குள்ள பறவையகம் மற்றும் கண்ணாடி மாளிகை தனித்துவமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
ஜான் பிரகாஷ் என்பவர் பேசுகையில், "சென்னை நகரத்தின் நடுவே இப்படி ஒரு பூங்கா அமைத்தது நன்றாக உள்ளது. ஒரு கிராமத்தில் உள்ளது போல இருக்கிறது. கட்டணங்கள் தான் அதிகமாக உள்ளது. அதை பாதியாக குறைத்தால் நன்றாக இருக்கும். குடும்பத்தோடு வருவதால் கட்டணம் அதிகமாக தெரிகிறது" என கூறினார்.
மற்றொரு பார்வையாளரான மகேஷ், "சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா மிகவும் வரவேற்கத்தக்கது. இது உலகத்தரத்தில் உள்ளது. இங்குள்ள பறவையகம் சிறப்பாக உள்ளது. மற்ற இடங்களில் பறவைகள் கூண்டுகளில் இருக்கும். ஆனால், இந்த பூங்காவில் கூண்டுக்கு உள்ளேயே சென்று உணவளிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
சாதாரணமாக இருக்கும் பறவை இனங்கள் இல்லாமல், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய ஆச்சர்யமூட்டும் பறவைகள் இங்குள்ளன. மின்சார பொருட்கள் வெளியே தெரிகின்றது. இது குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும், நீர்வீழ்ச்சியிலும் கூட எந்த ஒரு தடுப்பு சுவர்களும் போடவில்லை. நீர்வீழ்ச்சி மிகவும் ஆழமாக உள்ளது. எனவே, அதனை கருத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும்" என்று கோரிகை விடுத்தார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்: இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி விடுமுறை நாளில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பார்வையிட ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் சிலர் ஜிப் லைனில் பயணித்து பூங்காவை கண்டு கழித்தனர். அப்போது திடீரென ஜிப் லைன் நின்று போனதாகவும் அதில் தவித்த இரண்டு பெண்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டனர் என்றும் தகவல் வெளியானது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், அது திறக்கப்பட்டு ஐந்தே நாளில் ஜிப்லைனில் பழுது ஏற்பட்டு பெண்கள் தவித்தது கண்டிக்கத்தக்கது. தனியார் பொழுபோக்கு பூங்காக்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று கூறியிருந்தார்.
ஜிப் லைன் பழுதடையவில்லை:இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போல ஜிப் லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக க் கொண்டு செயல்படுகிறது. பழுதடைவதற்கு அதில் ஒன்றும் இல்லை. ஜிப்லைன் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து விநாடி ஜிப்லைன் தேங்கி இருந்தது. பின்னர் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்கு தளம் சென்றடைந்தனர். ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. பூங்காவில் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை உள்ளிட்டவற்றுக்கு சேவைக்கு ஏற்ற குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது," என்று கூறியுள்ளார்.