சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளியில், கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்பி வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
சிறுபான்மை மக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது:அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், “சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். கல்வி நிறுவனங்களும், அவைகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் பொன்முடிக்கு நன்றாக தெரியும் என்பதால் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்.
கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்நிலையைப் போக்கும் ஆயுதமாக மீண்டும் கல்வி பிறந்தது. குறிப்பாக, 17 சதவீதம் கிறிஸ்தவர்கள் உயர்ந்த பொறுப்பில் இருந்த நிலையில், தற்போது ஒரு சதவீதம் தான் உள்ளார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். மேலும், மற்ற ஒரு சமூகம் 70 சதவீதம் உயர்ந்துள்ளது. பொதுவான உரிமை சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படுகிறது.
சிறுபான்மையினர் வாரியம்:தனியாக வழங்கப்பட்ட உரிமைகளிலும் பிரச்சினை உள்ளது. எல்லோரும் சமம் என்ற தன்மை வர வேண்டும். இது நமக்கான அச்சுறுத்தல் இல்லை, தேசத்திற்கான அச்சுறுத்தல். இதற்கான விழிப்புணர்வு வேண்டும்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வை நீக்கி, பொதுமக்களுக்கு கல்வி கொடுத்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது.
குறிப்பாக, அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் கல்வி பயின்றவர்களாக இருந்தார்கள். அதற்கு மிக முக்கிய காரணம், அங்கு இருந்த கிறிஸ்தவ மிஷனரிகளே. இதன் காரணமாக தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அவரது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் வாரியம் என்ற ஒன்றை அமைத்தார். அதன் காரணமாக பல சிறுபான்மையினர் பெருமளவில் பயனடைந்தார்கள்.
நான் முதல்வன் திட்டம்:குறிப்பாக, திராவிட மாடல் தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்து உள்ளார். இதன் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியாகும். பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், அவர்கள் படிக்கும் பொழுது பலதரப்பட்ட தரவுகளை உள்வாங்கக்கூடிய அளவில் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சிறப்பாக அப்படிப்பட்ட ஒன்றுதான் தமிழ்நாடு அரசால் அமைச்சரின் பெயரால் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டம். குறிப்பாக, இளைஞர் திறன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தான் தற்பொழுது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து இளைஞர்களையும் பலதரப்பட்ட தரவுகளை உள்ளடக்கி அளிக்கக்கூடிய நான் முதல்வன் பயிற்சியின் மூலம் தேர்ச்சி பெறச் செய்து வருகிறார்.
சமத்துவம் கிடைக்கும் வரை சலுகைகள்:நாங்கள் சிறு வயதில் பள்ளியில் பயிலும் பொழுது மதிய உணவு கேட்டாலே எங்கள் பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டும் என கூறிச் சென்று விடுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றி காலை சிற்றுண்டியே ஆரம்பப் பள்ளிகளில் தர வைத்தவர் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அன்றைய காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் விடுதியில் தங்கி கல்லூரி படிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஏனெனில், அந்த அளவிற்கு யாருக்கும் வருமானம் இருந்தது கிடையாது.