சென்னை: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அக். 14 ஆம் தேதி 39வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதில், தமிழக ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
அந்த நிகழ்சின்போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றபோது புகார் மனு அளித்தார். இதனால், விழா மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழி நடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர் என்றும் அவர்களது குழந்தையைப் பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க:"விரக்தி, ஏமாற்றம்.. விஷ ஜந்துகளுக்கு நாங்கள் விஷக்காளான்கள் தான்" - எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி!
இந்த நிலையில், ஆராய்ச்சி மாணவர்களை ஆராய்ச்சி தவிர்த்து தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தி, மன உளைச்சலைத் தரும் வழிகாட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.