தஞ்சாவூர்:தஞ்சையில் சிவனடியார்கள், முருக பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து ஆன்மீக பக்தர்களை ஒருங்கிணைக்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை ஆலோசகரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொன் மாணிக்கவேல் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் மீது அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. இது கொலையைக் காட்டிலும் ஒரு கொடூரமான செயல். கோயில் குத்தகை பாக்கி பணத்தை அதிகாரிகள் வாங்கிச் செலுத்த வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
வாஷிங்டனில் உள்ள மீட்கப்பட்ட சிலைகளை இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு குடும்பம் கோயிலை வெறுத்து வருகிறது. தனிப்பட்ட ஒரு நபர், மண்ணுக்குள் புதைந்து போன கோயிலை வெளியே கொண்டு வருகிறார். ஆனால், அரசின் மாநில தொல்வியல் துறை செத்த பூனையாக உள்ளது, அதற்கு ஆண்டுக்கும் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
புராதன கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்ய வேண்டும். குடமுழுக்கு நடத்துவது மட்டும் தான் இந்து சமய அறநிலையத்துறை பணி. ஆனால், தொல்லியல் துறை பணியை அறநிலையத்துறை எடுத்துக் கொள்கிறது, காரணம் ஊழல். தொல்லியல் துறையின் வேலையை அறநிலையத்துறை திருடி வைத்துள்ளது.
திருவெண்காடு கோயில்களின் சிலை வெளிநாட்டில் காட்சிப் பொருளாக உள்ளது. உடனடியாக அந்த சிலைகளை மீட்டுக் கொண்டு வர வேண்டும். தஞ்சை பெரிய கோயில் என்று பெயரை மாற்ற வேண்டும். தஞ்சை கோயிலை ராஜ ராஜேஸ்வரம் என்று தான் அழைக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 24 மணி நிதி ஒதுக்கப்படுகிறது
அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் ஸ்பெஷல் லஞ்ச் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார். இந்த விழாவில் நிர்வாகிகள் சக்திபாபு, சிவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டெடுப்பு!