சென்னை: குற்றச் செயல்கள், பாதுகாப்பு மீறல்களுக்காக வாகனங்களின் நம்பர் பிளேட்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்படுகின்றன. அதற்கு முந்தைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய அரசு அங்கீகரித்துள்ள இந்த நிறுவனங்களை, மாநிலங்களில் நியமித்து மாநில அரசு அறிவிக்க வேண்டும். மத்திய அரசு உத்தரவிட்டு, ஐந்து ஆண்டுகளாகியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை எந்த நிறுவனங்களையும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி நிறுவனங்களாகத் தமிழக அரசு அறிவிக்கப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.