மதுரை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம ஊராட்சி தலைவர், பிடிஓ (BDO) உள்ளிட்டோர் அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், "பிடிஓ, கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நோட்டீஸ் அனுப்பக் கூடாது. கிராம ஊராட்சி தலைவர் கடிதத்தின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் தான் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் பிடிஓவுக்கும், கிராம ஊராட்சி தலைவருக்கும் இல்லை. எனவே அச்சுறுத்தும் வகையில் நோட்டீஸூம் அனுப்பக் கூடாது என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், இது குறித்து உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.