மதுரை: ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பழமையானது, பிரசித்தி பெற்றது. விதிப்படி இக்கோயிலில் 12 குருக்களும், 19 உதவி குருக்களும் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 குருக்களும், 7 உதவி குருக்களும் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இங்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் கிடைக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில் கவனம் செலுத்தும் அளவிற்கு, கோயில் பராமரிப்பு, பணியிட பூர்த்தி போன்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை. குருக்கள் பணியிடம் மட்டுமன்றி மணியம் ரிக் வேத பாராயணம், பாகவதர் உள்ளிட்ட 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. பல சந்ததிகளில் குருக்களே இல்லை. எனவே ராமநாதசுவாமி திருக்கோயிலின் பணியிடங்களை நிரப்பி பூஜைகள் உள்ளிட்டவை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: "ஓடிடி தளத்தில் தணிக்கை" - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை. "வசூல்ராஜா எம்பிபிஎஸ் வேலை மட்டுமே செய்கிறது" எனத் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்? ஆண்டு வருமானம் எவ்வளவு? ஊதியம் மற்றும் பராமரிப்பு போக மீதமுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது? கோயிலில் உள்ள சந்நிதிகள் எத்தனை? என்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் மற்றும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலின் செயல் அலுவலர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்