மதுரை: தேனி மாவட்டம் திருமால்புரம் பஞ்சாயத்து தலைவர் கனிராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பஞ்சாயத்து யூனியன், திருமால்புரம் பஞ்சாயத்தின் தலைவராக இருக்கிறேன்.
இதற்கு முன்பாக குமரேசன் என்பவர் திருமால்புரம் பஞ்சாயத்தின் செயலராக பணியாற்றிய நிலையில், பஞ்சாயத்து நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் பொறுப்பில் இருந்து 2022ஆம் ஜூலை மாதம் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கில் குமரேசன், அருள் முருகன் மற்றும் மேனகா ஆகியோரோடு சேர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை எரிக்க முயன்றார். இதுதொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்று கண்டமனூர்விலக்கு காவல்துறை துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் அவர்களை கையும், களவுமாக பிடித்து வழக்கு (CSR) பதிவு செய்தனர். ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த தவறு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே இது தொடர்பாக கண்டமனூர்விலக்கு காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கனிராஜா தமது மனுவில் கூறியிருந்தார்.