மதுரை:மதுரை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் மதுரை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெரு நாய்கள் சாலைகள் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் (Rabies virus) பரவி வருகிறது. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுவரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.