தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய குடியுரிமை வழங்கக் கோரிய விவகாரம்.. உள்துறைச் செயலருக்கு ஐகோர்ட் மதுரை அமர்வு உத்தரவு! - INDIAN CITIZENSHIP ISSUE

அகதிகளாக உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 4:28 PM IST

மதுரை:அகதிகளாக உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, 12 வாரங்களுக்குள்ளாக உள்துறைச் செயலர் உரிய முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கோட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மதினி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, எனது குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு வந்தோம். கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நாங்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்.

கோட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில், 1991 ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் 44 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமையை வழங்கக் கோரி தொடர்ச்சியாக மனு அளித்து வருகிறோம். தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளோம். இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, மத்திய உள்துறைச் செயலருக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க:"சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எப்படி கொண்டு செல்லப்படுகிறது?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

எனவே, கோட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான எனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி, “மனுதாரர் கடந்த 2022-ல் இந்திய குடியுரிமை வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, 12 வாரங்களுக்குள்ளாக உள்துறைச் செயலர் உரிய முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details