மதுரை:நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் தனக்கு மிரட்டல் அதிகரித்து வருவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி பா.ஜ.க பிரமுகர் சூர்யா சிவா தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்த நீதிபதி, 2 போலீஸ் பாதுகாப்பு வைத்திருப்பது தற்போது பேஷனாக மாறிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நான் பாரதிய ஜனதா கட்சியில் ஓ.பி.சி. மாநில பொதுச்செயலாளராக உள்ளேன். பொதுமக்கள் சேவைக்காகவும், கட்சி பணிக்காகவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இந்த சூழ்நிலையில் தற்போது சிலர் என்னை பின்தொடர்ந்து, தனக்கு நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக என்னுடைய கார் மீது பேருந்தை மோதச் செய்து என்னை கொல்ல முயன்றனர். அவர்களுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.