தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள நாகர்கோவில் காசியின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Nagercoil Kasi Bail Petition - NAGERCOIL KASI BAIL PETITION

Nagercoil Kasi Harassment Case: பல பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி, தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நாகர்கோவில் காசி
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நாகர்கோவில் காசி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 7:42 AM IST

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவர் சமூகவலைத்தளம் மூலமாகப் பல பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

அதைத் தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் காவல் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதையடுத்து காசியின் வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான புகாரில், கடந்த 2020ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதானார். காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் மற்றும் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணை நடத்திய நாகர்கோவில் விரைவு நீதிமன்றம், காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நாகர்கோவில் காசி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (செப்.9) நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, "நூற்றுக்கணக்கான இளம் பெண்களை, பள்ளி மாணவிகளை ஆசைவார்த்தைக் கூறி பாலியல் தொந்தரவு செய்து, புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை வழங்கி உள்ளது. ஆகையால் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு எதிரான குற்றம் சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், குற்றத்தின் தன்மை கருதி, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரரின் மேல் முறையீட்டு மனு குறித்து நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மதுரை மத்திய சிறை இடமாற்ற விவகாரம்: 6 மாதத்திற்குள் பணியைத் துவங்க ஐகோர்ட் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details